கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்-காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளையும் திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் உணர்வுகளை எதிரொலிக்கிறது. காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் ஓரிரு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். அவற்றை நாங்கள் கண்டித்திருக்கிறோம். அதேபோன்று காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கிறோம்.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போராட்டத்திலும், பிரதமர் நரேந்திரமோடி வருகைக்கு எதிராக நடைபெற்ற கருப்புகொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்ற ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், விவசாய அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த முன்னணி தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரின் மீதான பொய் வழக்குகளையும் திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Response