கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய வைகோ கைது…

சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடியை எதிர்த்து சின்னமலை அருகே போராட்டம் நடத்திய வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் இன்று மேற்கொண்டன.

சென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே உள்ள சின்னமலையில், கறுப்புக்கொடி ஏந்தி மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

இதில் பேசிய வைகோ, மோடிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், இனி தமிழக மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். இதில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response