35 ஆண்டுகளுக்கு பின் சவூதி அரேபியால் ஏப்., 18ல் தியேட்டர் திறப்பு

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா நாட்டில் 35 வருடங்களுக்கு முன்பு தியேட்டர்களை மூடினார்கள். அதன் பின் அங்கு தியேட்டர்களே கிடையாது. ஆனால், தற்போது தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்துள்ளார்கள்.வரும் ஏப்ரல் 18ம் தேதி சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் தியேட்டர் திறக்கப்பட உள்ளது. 500 பேர் அமரும் வசதி கொண்ட அந்த தியேட்டர் எஎம்சி நிறுவனம் கட்டியுள்ள தியேட்டர் ஆகும். சிம்பொனி ஹால், ஆர்க்கெஸ்ட்ரா, பால்கனி வசதி மார்பிள் பாத்ரூம்கள் என உலக அளவில் இந்த தியேட்டர் மிகச் சிறந்த தியேட்டராக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அந்த தியேட்டரில் முதல் திரைப்படமாக ஹாலிவுட் படமான ‘பிளாக் பாந்தர்’ வெளியாக உள்ளது. எதிர்காலத்தில் சவூதி அரேபியா உலக அளவில் திரைப்படங்களுக்கான முக்கிய வர்த்தக சந்தையாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதியில் இந்தியர்கள், மலையாளிகள், தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழ்ப் படங்களும் அங்கு வெளியிடப்பட உள்ளன. ‘காலா’ படத்தை அங்கு ஏப்ரல் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது, ஸ்டிரைக்கால் அது தள்ளிப் போக உள்ளதால் ஹாலிவுட் படங்கள் தமிழ்ப் படத்தின் இடத்தைப் பிடித்துள்ளன.

‘காலா’ படத்திற்கு முன்னதாக ‘பிளாக் பாந்தர்’ படம் வெளியாக உள்ளது.சவூதி அரேபியாவில் 2030ம் ஆண்டிற்குள் 350 தியேட்டர்கள் உருவாக திட்டமிடப்பட்டுள்தாகத் தெரிகிறது. உலக அளவில் பெரிய நெட்வொர்க் ஆக உள்ள தியேட்டர் நிறுவனங்கள் அந்த நாட்டில் தியேட்டர்களைத் திறக்க உள்ளன. இனி, இந்தியத் திரைப்படங்களுக்கு சவூதி அரேபியாவும் புதிய ஏரியாவாக மாறப் போகிறது.

Leave a Response