காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஆண்களுக்கான 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்.
தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பளுதூக்கும் வீரர்கள் தொடர்ந்து 3வது நாளாக பெருமைப்படுத்தி உள்ளனர்.
ஆண்களுக்கான 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் – பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் நமது வேலூரைச் சேர்ந்த சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சதிஷ்குமார் மென்மேலும் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற அவரது கனவு மெய்ப்பட அன்பான நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.