கிரிக்கெட் பார்க்காதீங்க.. ஜேம்ஸ் வசந்தன்-குவிகிறது ஆதரவு..

சென்னை: காவிரி விவகாரத்தில் சர்வதேச அளவில் கவனத்தை பெற ஐபிஎல் போட்டியை புறக்கணியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவையும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கொந்தளிப்பில் உள்ளது. அரசியல் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.

April 10-ம் தேதி CSK-வின் முதல் match. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் உலகம் முழுவதும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்கிற இந்தத் தியாகம், 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லையே. பிசிசிஐ என்பது தனிப்பட்ட அமைப்பு, என்னை பொருத்தவரையில் மத்திய அரசுக்கு இதில் எந்த கவலையும் இல்லை. நாம் வேறு மாதிரி திட்டங்களை தீட்டலாம். ஆனால் நீரை நாம் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று இந்த வலைஞர் கூறியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் கூறுவது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஸ்டேடியத்தில் இருக்கும் போது அதை பார்க்காமல் ரசிகர்கள் புறக்கணிப்பது ஏன் என்பதை ஒட்டுமொத்த நாடே சிந்திக்க வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

சுரேஷ் என்பவரின் கருத்து இது: இந்த ஐடியாவை ஆதரிக்கிறேன். போட்டியைக் காண யாரும் போக வேண்டாம். மொத்த இந்தியாவும் இதை சீரியஸாக பார்க்க வேண்டும்.

Leave a Response