காவிரிக்காக நாளை முழு அடைப்பு வெற்றி பெற கை கோர்ப்போம் – ஸ்டாலின்

சென்னை: டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முழு கடை அடைப்பும் நடக்கிறது. பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ள நிலையிலும் பலத்த பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

6ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் அரசு தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. பொதுத்தேர்வுகளும் நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுமுறை எடுக்காமல் அனைவரும் நாளை பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் முழு அடைப்பின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் கவனமுடன் உள்ளனர். இதற்காக 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பந்த் பற்றி பதிவிட்டுள்ளார். காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்தி வரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும். அனைவரும் கை கோர்ப்போம், களம் காண்போம்!
என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response