மத்திய அரசை கண்டித்து திமுக ஆதரவு கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு: பல கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு பாமக, தமாகா, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், சாலை, ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 1-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஏப். 5-ம் தேதி (நாளை) தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.

முழு அடைப்புப் போராட்டத்தை பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இக்கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாமக, தமாகா, கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கங்கள், விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வரும் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு தமாகா ஆதரவு அளிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தை திட்டமிட்டு மத்திய அரசு ஏமாற்றியுள்ளது. மத்திய அரசின் கபட நாடகத்தை தமிழக விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொண்டதால்தான் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறி வருகிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை (5-ம் தேதி) நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் கொமதேக பங்கேற்கும்’ என தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் ஓடாது

முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாளை தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது என தொமுச தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் வே.நித்தியானந்தம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சம் குறுந்தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Response