மத்திய அரசிடம் மண்டியிடுவதை தவிர வேறொன்றும் தெரியாதா?- ஸ்டாலின் கோபம்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் பொறுமையாக இருந்துவிட்டு அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்கிறீர்களே, இதில் கூடவா மண்டியிடும் புத்தி என ஸ்டாலின் கேட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலக்கெடு விதித்த பின்னர் ஆரம்பத்திலேயே வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. குறிப்பாக மு.க.ஸ்டாலின் இதை அதிகமாக வலியுறுத்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பிரதமாரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று மாநில அரசு கூறியபோது இதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 6 வார கால அவகாசம் இருக்கிறது என்று பதில் சொல்லி இந்தப் பிரச்சினையை அதிமுக தலைவர்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றனர்.

6 வார காலக்கெடு முடிந்த பின்னர் மத்திய அரசு மேலும் காலம் தாழ்த்த மனு அளிக்க வாய்ப்புள்ளது, அதற்கு முன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மாநில அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை மத்திய அரசு கால அவகாசம் கேட்டு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அது தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாநில அரசு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இதை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார். இதில் கூடவா மணியிடும் புத்தி என கேள்வி எழுப்பியுள்ளார்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய பாஜக அரசு காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தபிறகு, மாநில அரசின் சார்பில் 11.15 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலும்கூடவா மண்டியிட்டுப் பின்தொடர வேண்டும்? ”என்று ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்

 

Leave a Response