தாஜ்மகாலை பார்க்க இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

தாஜ்மகாலை பாதுகாக்கவும், அந்த பகுதியில் மாசு ஏற்படாமல் தடுக்கவும், பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக விளங்கும் தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தாஜ்மகாலை சுற்றி 10,400 சதுர கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை சுற்றி பார்ப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர். தற்போது, தாஜ்மஹாலை, காலை முதல் மாலை வரை சுற்றிப்பார்க்கலாம்.

தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் பெருமளவு மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுங்கடங்காத கூட்டத்தால் நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

இதையடுத்து தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளதாவது:

‘‘உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மகாலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் தாஜ்மஹாலுக்கு வரும் பார்வையாளர்கள் மூன்று மணிநேரம் மட்டுமே சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.

இதுமட்டுமின்றி பார்வையாளர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களை கண்காணிப்பதற்காகவே கூடுதலாக ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response