மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் மாணவர் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் வலுவாக வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு முடிந்த பின்னரும் அலட்சியமாக செயல்படுவதும், தற்போது மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்து வாரியம் அமைக்க அவகாசம் கேட்பதும், காவிரி மேலாண்மை வாரியம் இல்லாமல் வேறு முறைகளில் எதையாவது அமைக்க முடியுமா என்று கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த செயல் பல பத்தாண்டுகளாக காவிரி உரிமைக்காகப் போராடி வரும் தமிழக மக்களை கோபமடைய வைத்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் பாஜக தமிழக தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறுவதும், அதிமுக தலைவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடாதது பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது. அதே அளவு பெரிய எழுச்சியை தற்போது காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.

மெரினாவில் காவிரி மேலாண்மை விவகாரம் சம்பந்தமாக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை தகவல் வந்ததை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர். மெரினா சர்வீஸ் சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஆனாலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால் போலீஸார் சற்று மெத்தனமாக இருந்தனர். இந்நிலையில் கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே கடலுக்கு சற்று அருகே வரிசையாக நின்ற இளைஞர்கள் கையில் பதாகைகளை பிடித்து திடீரென கோஷம் போட ஆரம்பித்தனர்.

திடீர் போராட்டத்தை முகநூலில் அவர்களில் சில இளைஞர்களே பதிவு செய்து ஒளிபரப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸாருக்கு இந்த தகவல் கிடைத்தவுடன் போலீஸார் நூற்றுக்கணக்கில் கடற்கரை மணலில் இறங்கி தண்ணீர் பரப்பை நோக்கி ஓடி வந்தனர். போராட்டம் நடத்திய இளைஞர்களைத் தேடினர்.

ஆனால் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து கண்ணகி சிலை, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி என நகர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தினர். போலீஸார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். முகநூல் மூலம் போராட்டம் நடப்பது அதிகமானோரால் ஷேர் செய்யப்படுவதால் சென்னை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response