சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம்..

ரயில்வே உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்திவந்த சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செல்லலாம்.

ரயில்வே வாரியத் தலைவர், பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகிய உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான வசதிகள் கொண்ட பெட்டிகளில் பயணம் செய்தனர். குளிரூட்டப்பட்ட இந்தப் பெட்டிகளில் வரவேற்பறை, 2 படுக்கையறைகள், கழிவறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்நிலையில், ரயில்வே உயரதிகாரிகள் மட்டுமே பயணம் செய்துவந்த இப்பெட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலம் பொதுமக்கள் 6 பேர் டெல்லியிலிருந்து ஜம்முவிற்கு சலூன் கோச்சில் இன்று (சனிக்கிழமை) பயணம் சென்றனர். இது நான்கு நாட்கள் பயணமாகும்.

இந்த சலூன் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ஆகும் செலவு ரூ.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய உணவகங்களிலுள்ள அறைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த சலூன் கோச்சில் அனுபவிக்கலாம் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வேயில் மொத்தம் 336 சலூன் கோச்கள் உள்ளன. அவற்றுள் 62 சலூன் கோச்களில் குளிரூட்டி வசதி உள்ளது.

Leave a Response