ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை மக்களோடு செர்ந்து போராடுவேன்-சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்..

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களைச் சந்தித்துப் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அக்கிராம மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரை குடித்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. தற்போது செயல்பட்டு வரும் ஆலையை மூட வேண்டும் என்பது குமரெட்டியாபுரம் கிராம மக்களின் கோரிக்கை. தங்களது கிராமத்தில் வேப்பமரத்தடியில் நடத்தி வரும் இப்போராட்டம் 48 வது நாளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இன்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இக்கிராமத்துக்கு நேரில் வந்து போராட்டக் களத்தில் உள்ள மக்களைச் சந்தித்தார்.

அம்மக்களுக்கு நடுவில் நின்றுகொண்டு பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆலையின் பாதிப்பை அனுபவித்து வருகிறீர்கள். இதை மூட வலியுறுத்தி நீங்கள் போட்ட இந்தப் போராட்ட விதை, இன்று விருட்சமாகி தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த ஆலையின் பாதிப்புகள் சென்று சேர்ந்துள்ளன. தொடங்கியதிலிருந்தே பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே இதற்கு எதிர்ப்புகள் இருந்து வந்துள்ளன. ஆனால், தொடர்ந்து இது மூடப்படாமல் இருப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாநில அரசும் இந்த ஆலையைத் தொடர்ந்து ஆதரித்து வருவதுதான் காரணம். இதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது.

அரசியல் அடையாளம் இல்லாமல் வாருங்கள் எனக் கட்சிகளுக்கு நீங்கள் சொன்னதை நான் வரவேற்கிறேன். அதே நேரம் அதிக எண்ணிக்கையில் கைகோத்து போராட்டம் நடத்தினால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இப்போராட்டத்தின் ஒற்றுமையைக் குலைக்க, சீண்டிப்பார்த்து கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருபவர்களை மட்டும் தவிருங்கள். அடுத்த தலைமுறைக்கான உங்களது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல தமிழகம் முழுவதும் இப் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரைப் பாருங்கள்.. இதைத்தான் நாங்க குடிக்கிறோம்” என மக்கள் தண்ணீரைக் காண்பிக்க, அதனை வாங்கிக் குடித்துவிட்டு “ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை உங்களுடன் நானும் இணைந்து போராடுவேன்” என்றார்.

Leave a Response