இயக்குனர் கார்த்திக் நரேன் புகார் தொடர்பாக-கௌதம் மேனன் விளக்கம்

இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் இடையே பட தயாரிப்பு தொடர்பாக மோதல் போக்கு உருவாகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தற்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இயக்குநர் கௌதம் மேனனும் ஒருவர். இந்நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் உருவாகியுள்ளது.

கார்த்திக் நரேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை பதிவிட்ட பதிவொன்றில், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டார். இது கௌதம் மேனனை குறிப்பிட்டு சொன்னதுபோல் இருந்தது.

இந்நிலையில், அன்றிரவே கௌதம் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், சில இளம் இயக்குநர்கள் படத்தை உருவாக்கிவிட்டு புலம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனை ரீட்வீட் செய்த கார்த்திக் நரேன், “பலர் எனக்கு அறிவுரை கூறினாலும், நான் உங்களை நம்பினேன். ஆனால், நீங்கள் என்னை குப்பை போல நடத்திவிட்டீர்கள்” என பதிவிட்டார்.

இந்நிலையில், கௌதம் மேனன் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,

“நரகாசூரன் குறித்து நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனால், என்னுடைய இயக்குநரின் (கார்த்திக் நரேன்) ட்விட்டர் பதிவால் நான் வருத்தமுற்றேன். அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் நான் ட்வீட் செய்தேன். ஆனால், அதனை செய்திருக்கக்கூடாது என நினைக்கிறேன். அதற்காக கார்த்திக்கிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்.

நரகாசூரன் தயாரிப்பு வேலைகளில் நான் தலையிட்டதில்லை, குறிப்பாக திரைக்கதை விவாதத்திலும் பங்கெடுக்கவில்லை. இயக்குநர் என்ன வேண்டுமென கூறுகிறாரோ அதை அவருக்கு செய்து தர வேண்டும் என்றே நான் என் குழுவினரிடம் தெரிவித்திருந்தேன். அவர் மிக சுதந்திரமாகவே நடத்தப்பட்டார். அவர் விரும்பும் நடிகர், நடிகைகள் மிகுந்த பொருட்செலவில் நரகாசூரன் திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர்.

நரகாசூரனின் லாபத்தில் நான் 50% பங்கு கேட்கவில்லை. இந்த படத்தில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பதும் தெரியும். நான் இந்த படத்திலிருந்து விலக வேண்டும் என கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியாக விலகிக்கொள்வேன். ஏனெனில், இந்த படம் என்னுடைய பொறுப்பு அல்ல. சில தகவல் தொடர்பின்மையாலேயே கார்த்திக்கின் கோபம் வெளிப்பட்டிருக்கிறது.

யாராலும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை நிறுத்த முடியாது.

நரகாசூரன் சந்தித்த பிரச்சனைகளை அனைத்து திரைப்படங்களும் சந்தித்துள்ளன. எல்லா தயாரிப்பாளர்களும் இதனைக் கடந்தே வந்திருப்பார்கள். இந்த படக்குழுவை மட்டம் தட்டவே யாரோ இதனையெல்லாம் செய்கின்றனர். இன்னும் சில நாட்களில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் படம் ரிலீஸ் தேதி குறித்து முடிவெடுக்கப்படும்.

எங்கள் இருவருக்கிடையே தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சில விஷயங்கள் குறித்து நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம்”

என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response