கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்

தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் எப்போதும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது. தமிழக ஆட்சியாளர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதுகுறித்து வாய்திறக்காமல் இருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு விதித்த போதே, மத்திய அரசு இதைச் செயல்படுத்தாது என்று நான் தெரிவித்தேன். தற்போது அதேபோல் நடந்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கையே இனி ஒரே தீர்வு.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தரத்தவறிவிட்டது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் முடியும் வரை மத்திய அரசு இதுகுறித்து வாய் திறக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Response