சென்னை கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்தனர் !

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பங்குனிப் பெருவிழா கிராம தேவதையான கோலவிழியம்மன் பூஜையுடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி உற்சவருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 5 மணிக்கு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு மேளதாளம், நாதஸ்வரம் முழங்க கபாலீஸ்வரர் எழுந்தருளிய தேர் வீதியுலா புறப்பாடு தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பினர். மாட வீதிகளில் வலம் வந்த தேர், பிற்பகலில் நிலைக்கு வந்து நின்றது. இதையடுத்து நேற்றிரவு ஐந்திருமேனிகள் ஊர்வலம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி மாடவீதிகளில் பல இடங்களில் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர். மோர், குளிர்பானம் போன்றவைகளும் வழங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவத்தைத் தவிர்க்கும் வகையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோயிலை சுற்றிலும் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Response