போலி, ‘மொபைல் ஆப்’களால், உண்மையான பெட்ரோல் விலையை தெரிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடையும் மக்கள்….

petroll
பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், சொந்தமாகவும், டீலர்கள் வாயிலாகவும், பெட்ரோல், ‘பங்க்’கள் நடத்தி வருகின்றன. தற்போது, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. காலை, 6:00 மணி முதல், புதுவிலை அமலுக்கு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், ‘பங்க்’கில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ள, ‘மொபைல் ஆப்’ சேவையை அறிமுகம் செய்துள்ளன. அதே போல, தனியாரும், பல மொபைல் ஆப்களை உருவாக்கி உள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் ஆப் உடன் ஒப்பிடும் போது, தனியார் ஆப்களில், அதிக விலை காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் ஆப் போலவே, பல தனியார் ஆப்கள் காணப்படுகின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து, விலையை பார்த்தால், அதிகமாக இருந்தது.

வாகன ஓட்டிகளிடம், பெட்ரோல் விலையை அறிவதில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதிக பணம் வசூலிக்க, சில பெட்ரோல், ‘பங்க்’களே, போலி மொபைல் ஆப்களை உருவாக்கி வருகின்றனவா என, சந்தேகம் எழுகிறது. பெட்ரோல், ‘பங்க்’கிலும், தினமும் விலை விபரத்தை தெளிவாக தெரிவிப்பதில்லை. எனவே, போலி மொபைல் ஆப்களை தடை செய்வதுடன், பெட்ரோல், ‘பங்க்’களில் விலை விபரத்தை எளிதில் தெரிந்து கொள்ள, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Response