திமுக உள்ளிட்ட எந்த கட்சி அழைத்தாலும் மக்களுக்காக பாகுபாடு இன்றி போராடுவோம்-தினகரன்

மக்கள் பிரச்னைகளுக்காக கட்சி பாகுபாடு இன்றி போரட வேண்டும், எனவே, திமுக உள்ளிட்ட எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளைக் கண்டித்து எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்கட்சித் தலைவர்கள் போலீஸார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேரில் சந்தித்தார்.

அதன்பின்பு அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ஓ.என்.ஜி.சி நிறுவனப்பணிகளை எதிர்த்த போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு வாழ்த்து கூறவே இங்கு வந்துள்ளதாகவும், அவர்களுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த வித தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி இருந்தாலும், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும்வரை நிச்சயம் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காது.

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பி.,க்களும் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள குறியாக இருப்பார்கள். ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் தரமாட்டார்கள். எனவே மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி போராட வேண்டும் .

அதனால், திமுக உள்ளிட்ட எந்த கட்சி அழைத்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கும் என்றும், காவிரி, ஸ்டெர்லைட் விவகாரங்களில் போராட தயாராக உள்ளதாகவும் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Response