விருதுநகர் அரசு மருத்துவமனை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் !

viruthunagar

விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் தேங்கும் அரசு மருத்துவமனை கழிவுநீரால் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 1,500 புறநோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். 400 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 150 செவிலியர் பயிற்சி மாணவிகள், 75 செவிலியர்கள், 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் மனித கழிவு கலந்த கழிவுநீர் பத்துக்கும் மேற்பட்ட செப்டிக் டேங்குகளில் சேகரமாகிறது. இந்த செப்டிக் டேங்குகள் இரண்டு நாட்களில் நிரம்பி விடுகின்றன. இதனால், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் ராட்சஷ மோட்டர்கள் மூலம் செப்டிக் டேங்க் கழிவுகள் பம்பிங் செய்பயப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனை முன்புறம் உள்ள வாறுகால் மண்மூடி கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் வாறுகாலை தூர்வாராததால் மருத்துவமனையில் இருந்து பம்பிங் செய்யப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீர் மல்லாங்கிணர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீரை 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரிய பயிற்றுனர்கள் மிதித்து செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேலும், ரோசல்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாகனங்களில் கழிவுநீர் வழியாகத்தான் வீடுகளுக்கு செல்கின்றனர். கழிவுநீர் காய்ந்த பின் தூசிகளாக மாறி வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்களின் சுவாசம், கண்களில் விழுந்து பாதிப்பை உருவாக்குகிறது. எனவே, மல்லாங்கிணறு ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

“கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனை செப்டிக் டேங்க் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனை மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிதித்து செல்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், சுகதாரப்பணிகள் இணை இயக்குநர், நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. மருத்துவமனை கழிவுநீரை பாதாளச்சாக்கடை குழாய்களில் பொருத்த ரோட்டில் செல்லும் குழாயை கண்டுபிடிக்க முடியவில்லை என பொறுப்பற்ற பதிலை தெரிவித்து வருகின்றனர். முழு சுகாதாரத்தை வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம் மருத்துவனையின் கழிவுநீரால் ஏற்படும் ஆபத்தை கண்டும், காணாமல் இருப்பது வேதனையான இருக்கிறது” என்றனர்.

Leave a Response