விக்ரம் ரசிகர்களுக்கு பரபர விறுவிறு விஷுவல் டிரீட்! ‘ஸ்கெட்ச்’ சினிமா விமர்சனம்

IMG_20180113_231338
டியூவில் பைக், கார் வாங்கிவிட்டு டியூ கட்டாமல் இழுத்தடிக்கிறவர்களை தேடிப்போய் அந்த வாகனங்களை ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்குகிற வேலையில் இருக்கிறார் விக்ரம்!

ஒரு கட்டத்தில் தன் முதலாளியின் காரே ஒரு தாதாவிடம் இருப்பதை கேள்விப்பட்டு அதையும் தன் நண்பர்கள் நாலுபேரை வைத்துக் கொண்டு பக்காவாக ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறார்!

அதையடுத்து விக்ரமின் அந்த நண்பர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

காரை தூக்கிய கோபத்தில் அந்த தாதாதான் ஆட்களை வைத்து இந்த கொலைகளை செய்கிறார் என்பதுபோல் ரத்த்மும் சதையுமாக நகர்கிற திரைக்கதையில் சுளீர் என ஒரு டிவிஸ்ட் வருகிறது!

அது என்ன என்பதை தியேட்டரில் பாருங்கள்!

விக்ரம் படு ஸ்டைலிஷ் லுக்கில் வருகிறார். அடர் தாடியும் திமிறும் உடம்பும் ஆக்ரோஷ ஆக்ஷனுமாய் மனிதர் படம் முழுக்க சிங்கத்துக்கு மதம் பிடித்தது போல் கம்பீரமாய்த் திரிகிறார்! வெல்டன் சீயான்!

தமன்னா டிபிகல் தமிழ் சினிமா ஹீரோயினாக வருகிறார். ஒரு கோட்டு பெயிண்ட் கூடுதலாய் அடித்த சுவர் போல் சற்றே பூசினாற்போலவும் பளீரென்றும் இருக்கிறார்! நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை.

தமன்னாவின் தோழியாக வருகிற பிரியங்காவும் கவர்கிறார்!

விக்ரமின் நண்பர்களாக வருகிற மூன்று பேரும், விக்ரமின் முதலாளி சேட்டும், அந்த தாதாவும், போலீஸ் உயரதிகாரியும் கதையோடு அழகாக பொருந்திப் போகிறார்கள்!

படத்தில் அந்த பெரிய தாதா தவிர இன்னொரு வில்லனாக ஆர் கே. சுரேஷ்! சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிப்பில் கெத்து காட்டி செத்துப் போகிறார்!

படத்தில் சூரியும் இருக்கிறார். அவர் சிரிக்க வைப்பதற்கான காட்சிகள்தான் அவ்வளவாய் இல்லை!

விக்ரமின் ஓப்பனிங் பாட்டும், தமன்னாவுடனான டூயட் பாட்டும் கேட்கும்படியிருக்கிறது. ஆக்ஷன் படத்துக்கு எந்த மாதிரியான ஆர் ஆர் தேவையோ அதை நேர்த்தியாக தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தமன்!

படத்தின் முன்பாதி முழுக்க ஒரே மாதிரியான காட்சிகளோடு நகர்வது சற்றே அயர்ச்சியைத் தந்தாலும் இன்டர்வலுக்குப் பின் வேகமெடுத்து கடைசி 20 நிமிடங்களில் தார்ச் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது போன்ற விறுவிறுப்பைத் தந்திருக்கிறது திரைக்கதை!

”சின்னப் பசங்களை வேலைக்கு அனுப்பாதீங்க. ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வையுங்க” என கருத்து சொல்வதே இயக்குநரின் நோக்கமாக இருக்கிறது. அதற்கேற்றபடி, படிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்குப் போகிறவர்களின் வாழ்க்கை எப்படி பாழாகிறது என்பதை அழகாக காட்சிப் படுத்தியிருக்கிற இயக்குநர் விஜய் சந்தருக்கு அழுத்தமான கை குலுக்கல்!

மொத்தத்தில் ஆக்ஷன் விரும்பிகளுக்கும் சீயான் ரசிகர்களுக்கும் ஸ்கெட்ச் பரபர விறுவிறு விஷுவல் டிரீட்!

Leave a Response