மகான் – திரைப்பட விமர்சனம்

இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் – விக்ரம், துருவ், பாபி சிம்ஹா

இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை தான் “மகான்”.

காந்திய கொள்கைகளை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் தன்னுடைய சுய விருப்பத்தின்படி வாழ விருப்பபடும் நாயகன், ஒரு நாள் குடித்து விட்டு வர அதனால் தன் குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாகி, அவன் குடும்பம் அவனை பிரிகிறது. பின்னர் தன் போக்கில் சாராய அதிபராக மாறுகிறான். அவன் கொள்கைக்கு நேரெதிராக வளரும் அவன் மகன் அவனுடன் மோத வர அடுத்து அவனது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை.

ஆழமான கதையோட்டத்தில் உருவாக்கபட்ட திரைக்கதை. காந்திய சிந்தாந்தங்களில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம், எனக்கு விருப்பமான தவறுகள் நிறைந்த வாழ்க்கையை வாழவிடாமல் என்னை தடுக்காதீர்கள் என்ற சுதந்திரம் ஒரு பக்கம் என இருமுனைகளின் போராட்டத்தை கதைக்களமாக எடுத்ததற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.

1945, 1990 2000 என பல காலகட்டங்கள் அதன் பின்னணிகள் படத்தில் வருகிறது. அதனை நுணுக்கமாக உருவாக்கிய விதத்தில் படக்குழு பிரமிக்க வைக்கின்றனர்.

விக்ரம்-சிம்ரன் பிரிவதற்கான காரணம், தனது மகனுக்காக தனது நண்பனை கொல்ல துணிவதற்கான காரணம் என படத்தில் திரைக்கதையில் சில சிக்கல் உள்ளது. ஆனால் இந்த குறைகளையெல்லாம் நடிகர்கள் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள்.

பாபிசிம்ஹா அவரது லுக் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் அவரது தோற்றம் என அசத்தியிருக்கிறார். அவரது மகனாக வருபவர் மனதை ஈர்க்கிறார்.

விக்ரம் தான் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதை நிரூபித்திருக்கிறார். படம் மொத்தத்தையும் தன் தோளில் சுமந்து நிற்கிறார். மனைவிக்காக ஏங்குவது, இன்னும் பத்தல என மற்றவர்களை பதற விடுவது, மகனுக்காக கதறுவது, நண்பனிடம் கெஞ்சுவது என படம் முழுக்க அவரது ராஜ்ஜியம் தான்.

துருவ் இரண்டாவது படத்திலேயே பெரிய வேடம் ஆனால் அநாயசமாக நடித்திருக்கிறார்.

இசை பழங்கால ரெட்ரோ பாணியில் ஆரம்பித்து, பின்னணியில் மிரட்டுகிறது. ஒளிப்பதுவு ஒவ்வொரு காலகட்டத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடியாக படத்தை தந்திருக்கிறார். லாஜிக்கில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மகான் ரசிகனுக்கான மாஸ் சினிமா

Leave a Response