ரசிகர் கூட்டத்துக்கு உற்சாகப் பொங்கல்! ‘தானா சேர்ந்த கூட்டம்’ சினிமா விமர்சனம்

TSK 2
சமூக முறைகேடுகளைத் தட்டிக் கேட்க களமிறங்கும் ஹீரோயிசக் கதை!

ஹிந்தியில் பெரிய வரவேற்பு பெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் மேக்கிங்!

இயக்கம்: விக்னேஷ் சிவன்

சமூக அக்கறையுள்ள ஆசாமி சூர்யா. சிபிஐயில் சேர்ந்து முறைகேடாக சொத்து பணம் சேர்க்கிற பெருமுதலைகளை வேட்டையாட நினைக்கிறார். அதற்கான தகுதியுமிருக்கிறது அவருக்கு.

இருந்தாலும் சிபிஐ உயர் பொறுப்பிலுள்ள சுரேஷ் மேனனுடன் இருக்கிற பகையால் சூர்யாவின் ஆசை தவிடு பொடியாகிறது!

தன் ஆசையை முடக்கிக் கொள்ள முடியாத சூர்யா தனக்கென, தன் கொள்கையில் உடன்பாடுடைய சிலரை கூட்டமாகச் சேர்த்துக் கொண்டு போலியான சிபிஐ டீமை உருவாக்குகிறார்.

மூட்டை மூட்டையாய் பணம், பெட்டி பெட்டியாய் நகை என பெரும் பணக்காரர்கள் அரசாங்கத்துக்கு முறையாக வரி கட்டாமல் பதுக்கியவற்றை பக்காவாக பிளான் போட்டு ரெய்டு நடத்தி வேட்டையாடுகிறார்!

அப்படி கைப்பற்றிய பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்கிறார் என்பதும், அவர் போலீஸில் சிக்கினாரா என்பதும் படத்தின் மீதிக்கதை!

கடந்த பல வருடங்களாக ‘சிங்கமாகவே’ நடித்துக் கொண்டிருந்த சூர்யா இதில் படு ஜாலியான ஆசாமியாக வருகிறார். நடிப்பில் அத்தனை எனர்ஜி!

சூர்யா அமைத்த போலி சிபிஐ டீமில் ஒருவராக உள்நுழைந்து அப்படியே சூர்யாவின் மனதுக்குள்ளும் நுழைபவராக கீர்த்தி சுரேஷ். தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தில் செம மேட்ச்; அந்த ஹோம்லி லுக் அசத்துகிறது!

சிபிஐயின் உயர்மட்ட அதிகாரியாக ‘நவரச நாயகன்’ கார்த்தி! மனிதர் படு தெனாவட்டாக வருகிறார். ரசிக்கும்படியிருக்கிறது அவரது நடிப்பு!

ரம்யா கிருஷ்ணன் வருகிற காட்சிகளிலெல்லாம் தான் நடிப்பு ராட்சசி என்பதை காட்டிக் கொண்டேயிருக்கிறார்!

கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ், செந்தில், மாஸ்டர் சிவசங்கர் உள்ளிட்டோரின் நடிப்பு படத்துக்கு பலம்! யோகி பாபு அப்படி வந்து இப்படி போனாலும் தன் டிரேட் மார்க் காமெடியால் கலகலப்பூட்டுகிறார்!

சுரேஷ் மேனன் படம் நெடுக கம்பீரமாய் நடந்திருக்கிறார்; நடித்திருக்கிறார்!

திறமை இருந்தும் உரிய வேலை கிடைக்காமல் நொந்துபோகிற இளைய தலைமுறையின் பிரச்னைகளை அலசியிருப்பதற்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள்!

முதல் பாதியில் திரைக்கதை மந்தமாக இருந்தாலும் பின்பாதியில் ஜிவ்வென வேகமெடுக்கிறது!

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். பாடல்களுக்கான காட்சிகள் ஃபிட்!

பின்னணி இசையும் கச்சிதம்!

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாச அட்டனன்ஸ் போடுகிறது!

‘தானா சேர்ந்த கூட்டம்’ சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகப் பொங்கல்!

Leave a Response