இயக்கம் – நெல்சன்
நடிப்பு – சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, டோனி.
கதை – வாழ்க்கையில் பிராக்டிகலாக ஃபர்ஃபெக்டாக இருக்கும் ராணுவ டாக்டரை அவருக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நிராக்கரித்து விடுகிறார். அந்தப்பெண் வீட்டில் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட, அந்த குழந்தையை கண்டுபிடிக்க, அந்த குடும்பத்துடன் இணைந்து நம்பமுடியாத ஆக்சன் ஆபரேஷன் நடத்துகிறார் டாகடர். முடிவில் என்னவாகிறது குழந்தை கண்டுபிடித்து மீட்கப்பட்டதா என்பதே கதை.
ப்ளாக் காமெடி என்பது ஒரு தனி வஸ்து. அது தமிழ் சினிமாவில் எளிதில் கைகூடிவிடுவதில்லை. ஆனால் இந்தப்படத்தில் அந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். வெகு நாட்கள் கழித்து தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறக்க, என்ஞாய் செய்து பார்க்கும் படமாக வந்திருக்கிறது டாக்டர். க்ரைமில் காமெடியை சரிவிகிதத்தில் கலந்து, படத்தின் திரைக்கதையில் ஆச்சர்யப்படுத்துகிறார் நெல்சன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது சர்ப்ரைஸ் இருந்துகொண்டே இருப்பது அழகு. படத்தின் கதை முதல் காட்சியிலேயே ஆரம்பித்து எங்கும் விலகாமல் கொண்டு சென்றிருக்கிறார் நெல்சன். இயக்கத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது பல இடங்களில் வசனங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரை வெடித்து சிரிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் ஒபனிங் மாஸ் சீன் இல்ல, குத்து பாட்டு இல்லை, காமெடி பஞ்ச் இல்லை ஆனாலும் ஆச்சர்யம் காட்டி ஈர்க்கிறார். அனேகமாக சூரி, சதீஷ் இல்லாமல் அவர் வெற்றியடைந்த முதல் படம் இது தான். கச்சிதமான டாக்டர் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கோண்டு சபாஷ் வாங்கியிருக்கிறார். ப்ரியங்கா அருள் மோகன் தமிழுக்கு புது வரவு. அழகு பதுமை ஆரம்ப காட்சிகளில் கவரும் அவர் அதன் பிறகு அமைதியாகிவிடுகிறார். தலையை எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் குவிந்திருந்தாலும் எல்லோரும் ஒரு காட்சியிலாவது ஈர்த்து விடுகிறார்கள்.
யோகிபாபு, ரெடின் இருவரும் படத்தின் பெரிய பலம். இருவரும் பேசிக்கொள்ளும் காட்சியாக இருந்தாலும் தனிக்காட்சியாக இருந்தாலும், தியேட்டர் அவர்களை காட்டினாலே சிரிக்க தயாராகி விடுகிறது.. அதிலும் யோகிபாபு வில்லன் ஆட்களும் விளையாடும் காட்சி சரவெடி, ரெடின் பேசும் ஒவ்வொரு பஞ்சுக்கும் தியேட்டர் அதிர்கிறது. வினய் மிரட்டும் வில்லனாக கவர்கிறார். அவரது பார்வையே வில்லத்தனம் செய்கிறது. அர்ச்சனா ஒரு நடுத்தர குடும்பத்து அம்மாவை கச்சிதமாக் பிரதிபலித்துள்ளார்.
படத்தில் மிகப்பெரிய பலம் பின்னணி இசை. படம் முழுக்க நம்மையும் கதையோடு இழுத்து செல்வதில் அனிருத் இசை அசத்தல். ஒளிப்பதிவு அபாரம். கோவாவின் அழகை கண்முன் கொண்டு வந்துள்ளார் விஜய் கார்த்திக்.
இடைவேளை வரை கலகலவென செல்லும் கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறது. படம் காமெடியா சீரியஸா என குழப்பம் வருகிறது. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றல். ஆனாலும் காட்சிகளிலும் வசனங்களிலும் தான் நம்மை கவர்கிறார்கள். லாஜிக் என்பது துளி கூட ஒடவில்லை. பின்பாதியில் இழுவையை பொறுத்துகொண்டால் ரசிகர்கள் சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமா.
“டாக்டர்” – சிவகார்த்திகேயன் பாஸ் செய்திருக்கிறார்.
மதிப்பீடு: 2.75/5