கடைசி விவசாயி – திரை விமர்சனம்

இயக்கம் – மணிகண்டன் நடிப்பு – நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு

விவசாயத்தை விட்டுவிடுங்கள் என ரசிகர்கள் கெஞ்சும் அளவு விவசாயத்தை வைத்து தமிழ் சினிமா வியாபாரம் செய்து வந்தது. அதிலிருந்து மாறுபட்டு உண்மையான ஒரு விவசாயியின் கதையை சொல்லியிருக்கிறது இந்த “கடைசி விவசாயி” படம். எத்தனை வயதானாலும் விவசாயம் செய்வதை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் விவசாயிகள் அந்த மண்ணிலேயே மரணத்தை விரும்பும் விவசாயிகள் இருப்பதால்தான் நமக்கு இன்றும் உணவு கிடைக்கிறது.

தன் படங்களில் அழுத்தமான கதைகள் மனிதர்களின் எளிமையான வாழ்வியலை சொல்லும் இயக்குனர் மணிகண்டன் மீண்டும் ஒரு யதார்த்த வாழ்வியலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

படத்தில் வரும் விஜய் சேதுபதி, யோகி பாபு தவிர மற்ற அனைவருமே கேமராவையே பார்த்திராதவர்கள் ஆனால் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார்கள். மீண்டும் தமிழ் சினிமா பெருமைப்படும் ஒரு சினிமாவை தந்திருக்கிறார் மணிகண்டன்.

ஒரு குக்கிராமத்தில் பல வருடங்களாக இருக்கும் மரம் ஒன்று இடி விழுந்து அழிந்து போகிறது. குல தெய்வத்தின் கோபத்தால் நடந்ததாக ஊரே பதறுகிறது. ஊர் கூடி பேசி திருவிழா நடத்த திட்டமிடுகிறார்கள். குல தெய்வப் படையலுக்காக ஊரின் வயதான விவசாயி நல்லாண்டியிடம் நெல்லைப் பயிரிட்டு தரச் சொல்கிறார்கள்.

அவரும் தனது நிலத்தில் பயிரிட ஆரம்பிக்கிறார். ஒரு நாள் நிலத்தின் அருகே மயில்கள் இறந்து கிடக்கிறது. அதை எடுத்து அவர் புதைக்கிறார். அங்கு தான் சிக்கல் ஆரம்பிக்கிறது, மயில்களைக் கொன்று புதைத்ததாக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார். வயலில் நெல் விளைந்ததா, அவர் ஜெயிலில் இருந்து வந்ததாரா, ஊர் திருவிழா நடந்ததா என்பதே படம்.

ஒரு கிராமம் அதன் இயல்பான மனிதர்கள், ஊர்த் திருவிழா, போலீசாரின் பொய் வழக்கு, திரைக்கதைக்குள் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஒரு அழகான சினிமாவை சொல்லியிருக்கிறார் இயக்குன மணிகண்டன். மாயாண்டி என்ற வயதான விவசாயியாக நல்லாண்டி. இப்போது உயிருடன் இல்லாத இவர் இனி காலத்திற்கும் இந்தப்படம் மூலம் வாழ்வார். திரையில் அத்தனை மிரட்டியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து மண் மனதில் நிறைந்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.

முறைப் பெண் மரணமடைந்த காரணத்தால் கொஞ்சம் மனநிலை தடுமாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பவராக விஜய் சேதுபதி. இவரும் யோகிபாபுவும் இல்லையென்றாலும் படத்திற்கு எந்த பாதகமுமில்லை ஆனால் படத்திற்கு கூட்டம் வரவும் அங்கங்கே நம்மை உற்சாகப்படுத்தவும் இவர்கள் உதவியிருக்கிறார்கள்.

வக்கீல் கோர்ட் நீதிபதி இதையெல்லாம் வேறு கோணத்தில் காட்டியிருக்கிறது படம். பெண் நீதிபதியாக ரெய்ச்சல் ரெபேகா. இப்படி ஒரு எளிமையான நீதிபதியா என ஆச்சர்யப்படுத்துகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதுமுகங்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு அழகு தந்துள்ளது. ரிச்சர்ட் ஹார்வி இணைந்து இசைத்திருக்கிறார் வாழ்த்துக்கள். இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சினிமாவுக்கான கேமராவாக இல்லாமல் வாழ்வை எப்படி படமாக்க வேண்டுமோ அப்படி படமாக்கியிருக்கிறார்.

சினிமாவுக்கான கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத சினிமா ஆனால் தமிழ் சினிமாவை தலை நிமிர வைக்கும் படைப்பு.

Leave a Response