சிறுமி சரிகா மரணத்தில் 3 விதமான விசாரணை! – களமிறங்கிய சுகாதாரத்துறை

c3c94e179392cc49b21a4b3b03c9dd31

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமி சரிகா உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் 3 விதங்களில் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சரிகா. சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்ட இவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரை மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மதியம் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், குறித்த நேரத்தில் சிறுமியை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் வர சுமார் 7 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலதாமதத்துக்குப் பின் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், போரூர் பகுதிக்கு அருகே வரும்போது உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்த சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் பிரேக் டவுன் ஆனதே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சிறுமியை மேல்சிகிச்சைக்குப் பரிந்துரைத்த மருத்துவர், சிகிச்சை அளித்த செவிலியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறும்போது, “3 அதிகாரிகள் கொண்ட குழு மூலம் இது சம்பந்தமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் மூலம் 3 விதமான முறைகளில் விசாரணை நடத்தப்படும் ” என்றார்.

Leave a Response