அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது.
அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி வாலாஜா சாலை வழியாக மெரீனாவை வந்தடைந்தது. பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இந்த ஓராண்டில் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.
![ops-eps-765](https://www.ottrancheithi.com/wp-content/uploads/2017/12/ops-eps-765.jpg)
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலையில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்றனர்.
இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினர்.
![admk-jayalalitha645](https://www.ottrancheithi.com/wp-content/uploads/2017/12/admk-jayalalitha645.jpg)
ஓபிஎஸ். ஈபிஎஸ், அமைச்சர்கள் அனைவருமே கருப்புசட்டை அணிந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுலா இந்திரா உள்ளிட்டோர் கறுப்பு நிற புடவையில் வந்திருந்தனர்.
வாலாஜா சாலையில் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சமாதியின் முன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
![dinakaran7845.jpg.pagespeed.ic_.z7WwQ8NouY](https://www.ottrancheithi.com/wp-content/uploads/2017/12/dinakaran7845.jpg.pagespeed.ic_.z7WwQ8NouY.jpg)
இதனைத் தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் செல்கின்றனர். அவர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
![deepa093545](https://www.ottrancheithi.com/wp-content/uploads/2017/12/deepa093545.jpg)
மேலும், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்துகிறார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை சாலையில் எங்கெங்கும் மனித தலைகளாக காட்சி அளிக்கின்றன.