சூது கவ்வும் – விமர்சனம்!!

அட்டகத்தி, பிட்சா படங்களை தொடர்ந்து திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்-ன்  சூது கவ்வும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற டீசர் வெளிவந்த நாளிலிருந்து ரசிகர்களை கவ்வி கொண்டது இந்த சூது கவ்வும். தொடர்ந்து ரசிகர்கள் படம் எப்போது வெளிவரும் என்று காத்து கொண்டிருந்த வேளையில் வெளியாகி பட்டையை கிளப்புகிறது சூது கவ்வும்.

வேலையை இழந்து விட்டு சுற்றும் இரண்டு பேர், அவர்களை தேடி சென்னைக்கு வரும் அவர்களின் நண்பன் ஒருவன் ஆகிய மூவரும் பாரில் சரக்கடிக்க சென்ற இடத்தில் ஒரு சண்டை. அங்கு ஏற்படும் ஒரு தொடர்பு, அந்த தொடர்பில் அவர்களின் அடுத்த கட்டம் ஆள்கடத்தலில் தொடங்குகிறது. அதன் தலைவர் நியாயமே உருவமான விஜய் சேதுபதி. கிடைக்கும் பணத்தை வாங்கி கொண்டு ஆட்களை கடத்தும் இவர்களின் வாழ்வில் ஒரு திருப்பம். ஒரே கடத்தலில் இரண்டு கோடி கிடைக்கும் என்ற ஆசையில் மந்திரி மகனை கடத்துகிறார்கள். இதனால் அவர்கள் என்ன நிலைக்கு ஆளாகிறார்கள், 2 கோடி கிடைத்ததா? எதிர்காலம் என்ன என்பதை முழுக்க காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.

வெற்றி பட நாயகன் என கருதப்படும் விஜய் சேதுபதியின், அனைத்து படங்களும் வெற்றி. இந்த வெற்றியில் சேர வந்துள்ளது இன்னொரு படம். இந்த படமும் காமெடி படமாக அமைந்ததில் அடித்து நொறுக்குகிறார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு காட்சியிலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். குறிப்பாக இருட்டு அறையில் அடிவாங்கும் காட்சிகளில் முகபாவனைகளாலேயே சிரிக்க வைத்து விடுகிறார்.

படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே,  ஒவ்வொரு காட்சியிலும் கிளாமராக வந்து போகிறார். மற்றபடி வேறு வேலையில்லை. படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களுமே சூப்பர். சிம்ஹா, ரமேஷ், கருணாகரன், அசோக் செல்வன் என அனைவரும் கலக்குகிறார்கள். சிம்ஹாவும், கருணாகரனும் ஒரு படி மேல். கருணாகரன் செய்யும் கோல்மால், எம்.எஸ்.பாஸ்கரின் நேர்மை அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

ராதாரவி எம்.எஸ்.பாஸ்கரின் பதவியை பிடுங்கி கருணாகரனிடம் கொடுக்கும் காட்சி உச்சம். உயிருக்கு போராடி ஓடும்வேலையில் கூட படத்திற்காக சீன் யோசிக்கும் சிம்ஹா கல கல. போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜபீ ஒரு வார்த்தை கூட பேசாமல் உடல்மொழியில் அனைத்தையும் பேசிவிடுகிறார்.

படத்தில் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. காட்சியமைப்புகளிலும்,கோணங்களிலும் திறமையை காட்டுகிறார்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களில் ஸ்கோர் செய்தலும் பின்னணி இசையில் தீம் மியூசிக் தவிர மற்றவை பெரிய அளவில் இல்லை.பாடல்களில் குறிப்பாக கானா பாலா பாடி, ஆடும் பாடல் புதுவிதமாக வந்துள்ளது. மாமா டவுசர் பாடல் வரும் இடங்கள் அருமை.

குறும்படங்களில் முதலில் சாதித்தது இவர்தான் என்றாலும், திரைத்துறையில் இவரின் சீடர்களுக்கு பின் கொஞ்சம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். புது விதமாக கதை சொல்லியும், கோடைகாலதிர்கேற்ற பொழுதுபோக்கு படத்தை கொடுத்து ரசிகர்களை கவ்வி கொண்டுள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி.