எதிர்நீச்சல் – விமர்சனம்!!

சாதிக்க நினைக்கும் ஒரு இளைஞன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் கதைதான் இந்த எதிர்நீச்சல். சிறுவயதில் பெற்றோர் வைத்த குல தெய்வத்தின் பெயரான குஞ்சிதபாதம் என்ற பெயரால் மிகவும் கஷ்டப்படும் சிவகார்த்திகேயன் பெயரை மாற்ற முடிவு செய்கிறார். பெயரை ஹரீஷ் என்று மாற்றிய பின் அவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும், அந்த மாற்றங்களின் முடிவில் அவர் எடுக்கும் முடிவும், அவர் எடுத்த அந்த முடிவில் சாதித்தாரா? என்பதே எதிர்நீச்சல் படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் டிவி தொகுப்பாளராக இருந்து, காமெடி நடிகராக மாறி தற்போது மூன்று படங்களிலேயே நல்ல நிலையை எட்டி உள்ளார். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை தாண்டி இந்த படத்தில் புது எல்லையை தொட்டு உள்ளார். அவரது நடிப்பு, முகபாவங்கள், நடனம்,காமெடி எல்லாமே ரசிக்கும்படி உள்ளது. தனது பெயரினால் கூச்சப்பட்டு நிற்கும் இடங்களிலும், பிரியா ஆனந்தை சைட் அடிக்கும் இடங்களிலும் ரசிக்க வைக்கிறார். நந்திதாவிற்காக ஜெயிக்க நினைக்கும்போது மனதை தொடுகிறார். பாடல் காட்சிகளில் சூப்பர்.குறிப்பாக வெளிச்ச பூவே பாடலில் காஸ்ட்யூம் உள்பட அனைத்தும் சூப்பர்.

நாயகி பிரியா ஆனந்த். மற்ற படங்களில் வெறும் காதல் நாயகியாக வலம் வந்த பிரியா இந்த படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புமிக்கவராக வலம் வருகிறார். இவர், சிவா சம்பந்தப்பட்ட காட்சிகள் கல கல. பாதி படத்திற்கு மேல் இவரை கண்டுபிடிப்பது கஷ்டம்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி நந்திதா. ஓட்டபந்தய வீராங்கனையாக வரும் இவரது கதாபாத்திரம் அழுத்தம். தான் கொண்ட இலட்சியத்தை அடைய முடியாமல் இவர் படும் கஷ்டம், அவமானங்கள்,தன் தந்தையை இழந்து ஊரில் ஓரமாக வாழும்போது அனுதாபத்தை சம்பாதிக்கிறார். சிவாவுக்கு பயிற்சியாளராக இவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்த உடன் படம் மீண்டும் வேகமெடுக்கிறது.

படம் முழுக்க வரும் இன்னொரு முக்கிய நபர் சதீஷ். நாயகனின் நண்பராக வரும் இவர் அடிக்கும் லூட்டியில் தியேட்டர் குலுங்குகிறது. இன்னொரு ஹைலைட்டான விஷயம் தனுஷ், நயன்தாரா ஆடிவிட்டு போகும் சத்தியமா நீ எனக்கு பாடல். தியேட்டரில் அனைவரையும் எழுந்து ஆட வைக்கிறது அனிருத்தின் இசை. இசையோடு நில்லாமல் பாடலிலும் தலை காட்டிவிட்டு போகிறார் தம்பி. பயிற்சியாளர்களாக வரும் ஜெயப்ரகாஷ், ரவிப்ரகாஷ் பொருத்தமான தேர்வு.

வேல்ராஜின் கேமரா நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக வெளிச்சபூவே பாடலிலும், ஓட்டபந்தய காட்சிகளிலும் பிரமாதம். பாடல்காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

படத்தின் பெரிய ஒபெனிங்க்க்கு முக்கிய காரணம் அனிருத்தின் இசை. பாடல்களில் பின்னிய அனிருத், பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்.ஒவ்வொரு பாடலும் நச்.லோக்கல் பாய்ஸ் பாடல் எழுந்து ஆட வைக்கிறது.இரண்டு படங்களிலுமே இசை பெரிய பலம்.

நிறைய முதல் பட இயக்குனர்கள் வெற்றி பெற்று வரும் இந்த வேளையில் அழகான, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படத்தை எடுத்து நல்ல ஒரு மெசேஜ் சொல்லி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் துரை செந்தில்குமார்.