நடுவுல கொஞ்சம் “படம் தயாரிக்கும்” விஜய் சேதுபதி!!


ஒரு சில பிரபல நடிகர்களே அவ்வப்போது படம் தயாரிக்கிறார்கள். மற்றவர்கள் ஏன் இந்த வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள். பெரிய நடிகர்கள் கூட தயங்கும் நேரத்தில் நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ள விஜய் சேதுபதி படம் தயாரிக்கப் போகிறார். அவர் தயாரிக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த விஜய் சேதுபதி, யாரு இவர் யோசிக்க வைத்தவர். அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து பீட்சா, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து புதிய ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

இப்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, புதிதாக “விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன்” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இவரது தயாரிப்பில் முதன் முதலாக சங்குத் தேவன் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

கதைக்களம் திண்டுக்கல். ஆனால் கதாநாயகி யார் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. அட்டகத்தி, பீட்சா படங்களில் இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ள விஜய் சேதுபதி, ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்.