ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். மீனவர்களின் வலைகளை அறுத்ததோடு, பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கடந்த வாரத்தில் ராமேஸ்லரம் மீனவர்கள் இந்திய கடற்படையால் தாக்கப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், இரண்டு நாட்களாக கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இலங்கைக் கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.