நாகை மாவட்டம் நாகை பகுதி கருவாடு உற்பத்தியில் கேரளா மாநிலம் தலச்சேரிக்கு அடுத்தபடியாக உள்ளது. நாகையில் இருந்து வஞ்சிரம், கெழுத்தி, நெத்திலி உள்ளிட்ட பல்வேறு வகையான கருவாடுகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு தினம் தோறும் சுமார் 50 டன் அனுப்பப்பட்டு வருகிறது. கருவாடு உற்பத்தி தொழிலில் சுமார் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கருவாடு உற்பத்திக்கு வெயில் தான் முக்கியமானதாகும். தற்போது நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழை காரணமாகவும், வெயில் இல்லாததாலும், கடுவையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் ஓரம் இருந்த கருவாட்டு தளம் நீரால் சூழப்பட்டது. இதனால் மீன்களை பதப்படுத்தி காய வைக்க முடியவில்லை. இந்த மழைக்கு கருவாட்டுத் தொழிலில் பல கோடி ரூபாய் வரை பாதிக்கப்பட்டது.
மேலும் மழை முடிந்தும் கருவாடு இருப்பு வைக்கும் கொட்டகை மற்றும் கருவாடு காயவைக்கும் தளம் நீரில் மூழ்கியுள்ளதாலும், இன்னும் சில நாட்களுக்கு கருவாடு உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் வியாபாரிகள் உள்ளனர். தண்ணீர் வடிந்த பகுதியில் மட்டும் கருவாடு காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த தொழிலையே நம்பியுள்ள கருவாடு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடன் கருவாடு உற்பத்தி தொழில் செய்பவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.