டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

கஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர், ” தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதேசமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை. கஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதல் ‌கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவ.21) மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.

இதனிடையே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயலால் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளுக்கு போராடி வரும் டெல்டா பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Leave a Response