நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்-மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் நேற்று நடந்த திமுக நிர்வாகி புல்லட் ரமேஷ் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி உரிமைக்காக நாம் போராடி வருகிறோம். இந்தச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் மத்திய பாஜக அரசு இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என மத்திய அரசு கூறியது.

ஆனால், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிட்டபோது அதை செயல்படுத்த முன்வரவில்லை. தமிழகத்தைப் பற்றி துளியும் கவலைப்படாத அரசுதான் மத்தியில் இருக்கிறது. அந்த மத்திய அரசுக்கு துதிபாடும் அரசு தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம்.

திருச்சி, தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் காவிரி நீர் பயன்படவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்துக்கும் காவிரி நீர் செல்கிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கும் காவிரி நீர் செல்கிறது. காவிரியில் இருந்துதான் வேலூர் மாவட்டத்துக்கும் குடிநீர் வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் பயன்படுகிறது. அப்படிப்பட்ட காவிரி நீர் உரிமைக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை மீட்பதற்காக நாம் போராடி வருகிறோம். திங்கள்கிழமை (இன்று) மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த இருக்கிறோம். ஆனாலும், இதுபற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை தெரிந்துகொண்ட தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஊழலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குமாறு சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுபற்றி எதுவும் கூறாமல் அதிமுக அரசு அமைதியாக உள்ளது.

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி உருவாகும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவோம். ஊழல் அமைச்சர்களை விசாரிப்போம். அதன் பிறகு ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் சிறையில்தான் இருப்பார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Response