‘வரிஏய்ப்பு தமிழகத்தில் அதிகம் நடப்பது குறித்து நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும்!’– தமிழிசை!

 

29820

“எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் தைரியமாக வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளலாமே!” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று காலையில் இருந்து சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்கள் என 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் 1800க்கும் அதிகமான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன், “இது முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எடுக்கப்பட்டதே. எங்களிடம் முறைக்கேடாக எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

105208_thumb

இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். வருமான வரித்துறையினரை வைத்து அரசியல் செய்யும் நிலை மோடி அரசுக்கு இல்லை. மத்திய அரசின் வருமான வரித்துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வருமான வரிசோதனை சாதாரண நடவடிக்கை தான். இதற்கு ஏன் சிலர் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி எதுவும் வரிஏய்ப்பு இவர்கள் செய்யவில்லை என்றால் ஆவணங்களை காட்டிவிட்டு, நிம்மதியாக இருக்க வேண்டியது தானே என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

a6fe9861-28d9-4282-9d2a-1da7f91c8b15

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டுக்குப் பிறகு தான் வருமானவரித்துறையினரின் நடவடிக்கைகள் ஆரம்பித்து உள்ளன. இதில் முறைக்கேடான முறையில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள், வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து இந்தப்பிரிவு ஆய்வு செய்யும். ‘ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி’ என்கிற பெயரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு குடும்பத்தைச் சோதனையிட 1800 அதிகாரிகளா என்று தவறான கேள்வி எழுப்படுகிறது. உண்மையில் 1800 அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தும் அளவிற்கு ஒரு குடும்பம் சொத்து சேர்த்து இருக்கிறதா? என்று தான் கேள்வி எழுப்பப்பட வேண்டும். அண்ணன் ஸ்டாலின் வருமான வரி சோதனை கன்னித்தீவு நிகழ்வாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். கன்னித்தீவு போல வரி ஏய்ப்பு தமிழகத்தில் நடப்பது குறித்து நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும் என்றும் பதிலளித்தார்.

ttvnewjpg

மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, வருமான வரித்துறையினரின் சோதனை தான் பரபரப்பாக பேசப்படும். ஆனால், உண்மையில் இது முதற்கட்ட நடவடிக்கை தான். இதற்குப் பிறகு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. கைப்பற்றப்படும் ஆவணங்களைப் பொறுத்து தான் அதைச் சொல்ல முடியும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், இவரிடம் எங்களுக்கு என்ன அரசியல் வேண்டி இருக்கிறது. ஒரு கட்சி கூட இல்லை, கட்சியின் பிரிவுக்குத் தலைமை தாங்கும் இவரைக்கண்டு எல்லாம் பா.ஜ.க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.

Leave a Response