கன்னியாகுமரி மீன்வளத்துறை அதிகாரியின் கூடுதல் கட்டுப்பாடு- மாட்டிக்கொண்ட மீனவர்கள்!

boats

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தான் மீன்பிடிக்க வேண்டும். அதேவேளை ஆழ்கடலில் தங்கி தொழிலில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் இங்குள்ள விசைப்படகுகள் இந்த கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

boat1

இவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குமரி மாவட்ட மீன்வளத்துறைக்கு அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் சில விசைப்படகுகள் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலைகள் அறுந்து சேதமடைவதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து சின்னமுட்டம் துறைமுக மீன்வளத்துறை அதிகாரி தீபா, நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்தார். பின்னர் மீனவ பிரதிநிதிகளுடன் மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து வழக்கமாக மீனவர்கள் காலை 5 மணிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். ஆனால் இதை அனைவரும் சரியாக கடைபிடிக்கவில்லை.

boat

அதனால் இன்று முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கு முன் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து டோக்கன் பெற்றுச் செல்ல வேண்டும். இரவு 9 மணிக்குள் விசைப்படகுகள் கரை திரும்பியதும் அந்த டோக்கனை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும் புதிய கட்டுப்பாடு விதித்தார். சின்னமுட்டம் மீனவர்கள் தங்கி தொழில் அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் டோக்கன் பெற்றுச்செல்ல வேண்டுமென்று மீன்வளத்துறை கூடுதல் கட்டுப்பாட்டை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response