தமிழக மருத்துவமனைகளில் இன்னுமா தொடர்கிறது சசிகலா குடும்ப ஆட்சி?

 

‘மழை நின்றாலும் தூவானம் ஓயாது’ என்பார்கள். அதுபோலத்தான் சசிகலா கணவர் நடராஜனின் கதையும் தொடர்கதையாகியிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவின் கணவரும் , புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு விதிகளை மீறி கல்லீரல் பொருத்தப்பட்டதா?  என புதிய சர்ச்சையும் வெடித்துள்ளது.

 

ஒரு மாதத்திற்கு முன்பு , தினகரன் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கைது நடவடிக்கைக்கு பயந்து இதுவும் நடராஜன் செய்யும் அரசியல் ‘ஸ்டண்ட் தான்’ என தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

18VBG_NATARAJAN

ஆனால், சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் நடராஜனின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த  நிலையில் நேற்று சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இங்குதான் சர்ச்சையே தொடங்கியிருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தையே மர்மமாக வைத்திருந்தவர்கள் இந்த உறுப்பு மாற்று சிகிச்சையையும் மர்மான முறையிலேயே  நடத்திமுடித்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கத்தொடங்கியிருக்கிறார்கள்.

jayalalithaa-dead body

 

நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தில் இருந்து முதலில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.  அப்படியான ஒப்புதல் எதுவும் தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தில் இருந்து வராதபோதும், விபத்தில் இறந்த இளைஞர்  ஒருவரின்  உறுப்புகள்  நடராஜனுக்கு எப்படி பொருத்தப்பட்டது ? என்ற கேள்வியெழுந்துள்ளது. இதிலும் பல்வேறு மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்கின்றனர்  சில மருத்துவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயலைச் சேர்ந்த 22-வயது இளைஞர் கார்த்திக் என்பவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார்.   அவருடைய உறுப்புகளைத்தான் நடராஜனுக்குப் பொருத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அவருக்குப் பொருத்தப்பட்டதாக கூறாமல் 74 வயது நபருக்கு என மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது.

இதுபற்றி இன்னும் முழுமையாக தெரிந்துக்கொள்ள மன்னார்குடியின் சசிகலா உறவுக்காரர் ஒருவரிடம் தொடர்புக்கொண்டுப் பேசினோம்.

நடராஜனின் ரத்த மாதிரியோடு  பொருந்திப் போகிற நபரிடம்  இருந்துதான்  கல்லீரலையும்  சிறுநீரகத்தையும்  தானமாகப்  பெறமுடியும்.  அதன்படி, உறவினர்கள்  வட்டாரத்தில் தீவிர  தேடுதல்  வேட்டையை  நடத்தியுள்ளனர்.  அந்த நேரத்தில் தான் நடராஜனின்  நெருங்கிய  உறவு  முறையில்  இருந்த சுந்தரம்  என்பவர் தானம்  தருவதற்கு  ஒப்புக்  கொண்டார். அதேநேரம், அரசின்  உறுப்பு தான  ஆணையத்தில்   இருந்து  பதில் வரும் எனவும்  எதிர்பார்த்துக்  காத்திருந்தோம்.

sasikala

அரசின் உறுப்பு தான  ஆணையத்தின்  தலைவராக இருக்கும் மருத்துவர்  பாலாஜியிடம் இருந்து எந்தத்  தகவலும் வரவில்லை. (இவர்தான் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில்  அடிபடுகிறவர்).  மருத்துவர் பாலாஜி ஆட்சியில்  உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்  என்பதால், நடராஜன்  விஷயத்தில் போதிய  அக்கறை  எடுத்துக் கொள்ளவில்லை.  அதேநேரம், மருத்துவர்  முகமது  ரேலாவின் தீவிர  கண்காணிப்பால்  உடல்நிலையில்ஓரளவு  முன்னேற்றம்  ஏற்பட்டது.  இந்தநேரத்தில், அறுவை  சிகிச்சையை முடித்தால் நன்றாக  இருக்கும் எனத் தீர்மானித்ததால், மாநிலம் முழுவதும்  உள்ள மருத்துவமனைகளுக்குத்  தகவல் அனுப்பப்பட்டது.

 

அப்போதுதான், விபத்தில்  கார்த்திக்  என்பவர் மூளைச் சாவு அடைந்த  தகவல்  கிடைத்தது.  அவருடைய  ரத்த மாதிரியும்நடராஜனின்  ரத்தத்தோடு  ஒத்துப்  போனது. அந்த  இளைஞரின்  குடும்பத்தினரும்  சம்மதம்  தெரிவித்ததால் இது சாத்தியமானது. அறுவை சிகிச்சை  முடிந்தாலும்  இயல்பான  நிலைக்குத்  திரும்ப இன்னும்  ஓரிரு நாட்கள்  ஆகும். நடராஜன்  குடும்ப உறுப்பினர்களின்  தீவிர  முயற்சியால்  மட்டுமே  உறுப்பு  தானம்  கிடைத்தது” என்றார்.

ஏழ்மையான  குடும்பத்தைச்  சேர்ந்த  கார்த்தி கடந்த 30-ந் தேதி தஞ்சை அரசு  மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  மூளைச்சாவடைந்து விட்டதாக  பெற்றோருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் உடல் அவசர அவசரமாக சென்னைக்கு வந்தது எப்படி?,  தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தில் இருந்து எந்தப் பதிலும் வராத போதும் , விபத்தில் இறந்த இளைஞர் ஒருவரின்உறுப்புகள் நடராஜனுக்குப் எப்படி பொருத்தப்பட்டது? ஏன் மருத்துவமனை நிர்வாகம் உறுப்புதானம் பெற்ற நடராஜனின் பெயரை  வெளியிடமால் மறைத்துவைத்திருப்பதற்கான காரணமென்ன? உண்மையில் கார்த்திக் என்ற இளைஞர் மூளைச்சாவடைந்துதான் இறந்தாரா? அல்லது மிரட்டியோ ,பணம் கொடுத்தோ இல்லை ஒருவேளை உறுப்புகளுக்காக கொலைசெய்யப்பட்டாரா? என பலவிதமான  சந்தேக கேள்விகள் எழுந்துள்ளது.

 

இதற்கு மருத்துவமனைத் தரப்பிலோ , சசிகலா தரப்பிலோ எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஒருவேளை ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் போல ஏதேனும் கமிஷனோ அல்லது சிபிஐ விசாரணையோ அமைக்கப்பட்டால்தான் உண்மைகள் வெளிவருமோ ? என்னவோ?

_92848759_66adc7e6-da97-4bf6-9dbb-9f3d878d49b3

ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73-நாட்களும் அவரைப்பற்றிய உண்மைச்செய்திகள் எதுவும் வெளிவராவண்ணம் பார்த்துகொண்டது சசிகலா தரப்பு. அதேபோல இவ்விவகாரத்திலும் அவர்கள் ஈடுபட்டிருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவமனைகளில் சசிகலா கும்பலின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது!

Leave a Response