தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத கதைக்களம்! ‘ஸ்பைடர்’ சினிமா விமர்சனம்!

spy

தமிழ் சினிமாவில் இன்னுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம்!

நம்மூர் ஹீரோக்களை ’சூப்பர் ஹீரோ’க்களாக நிறைய படங்களில் பார்த்தாயிற்று. தெலுங்கில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ள மகேஷ்பாபுவை தமிழ் சினிமா ரசிகர்கள் சூப்பர் ஹீரோவாக பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்!

ar

தமிழ் சினிமாவில் இப்படியொரு படத்தில் அறிமுகமாவோம் என மகேஷ்பாபு எதிர்பார்த்திருக்க மாட்டார். வெல்கம் மகேஷ்பாபுகாரு!!

ஊரில் குரூரமான கொலைகள் அரங்கேறுகிறது. யார் அதை செய்வது என புலன்விசாரணையில் இறங்குகிறார் மகேஷ்பாபு.

அப்படியெனில் மகேஷ்பாபு காவல்துறை அதிகாரியா? சிபிஐ ஆபீஸரா? சிஐடியா? உம்ஹூம்… அரசின் இண்டெலிஜென்ஸ் பீரோ’ என்கிற முக்கிய துறையின் உயர்நிலை அறிவியல் மூளைப் பணியாளர்!

d8ba7f778a66406c1f010c9008fad631--mahesh-babu

அவருடைய அந்த அறிவியல் மூளை பணியோடு சேர்த்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ்காரராகிறார், சிபிஐ ஆபீஸராகிறார், என்கவுண்டர் போலீஸாகிறார் இன்னும் என்னவெல்லாமோ ஆகிறார்… அதெல்லாம் எப்படி முடியும்னு கேட்கக் கூடாது. சூப்பர் ஹீரோன்னா அப்படித்தான்!

காதலிக்கு ஆசையாக நேரம் ஒதுக்கி ஒரு ஹாய்கூட சொல்லமுடியாமல் ஓடிக் கொண்டேயிருக்கும்படியான கதாபாத்திரம் மகேஷ்பாபுவுக்கு! அவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்… சுனாமி வேகத்தோடு!!

சைக்கோ கொலைகாரர்களை எப்படி எப்படியெல்லாமோ பார்த்திருப்போம். ஸ்பைடர் படு வித்தியாசமான சைக்கோ கொலைகாரனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வாரக்கணக்கில் ஊரில் சாவு ஏதும் விழாததால் பிணங்களை எரிக்கிற, புதைக்கிற வேலை செய்யும் வெட்டியானுக்கு வேலையில்லை. இறந்தவர்களுக்காக சுற்றமும் நட்பும் அழுவதைக் கேட்டால்தான் வெட்டியானின் பிள்ளை சுடலைக்கு சோறு இறங்குகிறது. அழுகுரலைக் கேட்பதற்காக ஊரில் இருக்கிற யாரையாவது குரூரமாக கொலைசெய்துகொண்டேயிருக்கிறான் சுடலை. அந்த குரூரம் எந்த எல்லை வரை போகிறது என்பதும் மகேஷ்பாபு கொலைகாரனை எப்படி தேடிப்பிடிக்கிறார் என்பதும்தான் கதை!

spyder1

ஹார்லிக்ஸில் செய்த அல்வா போல் இருக்கிறார் ரகுல் பிரித் சிங். கதை படு வித்தியாசமாக, திரைக்கதை பயங்கர பரபரப்பாக இருந்தாலும் ஹீரோயின் கேரக்டர் என்னவோ வழக்கம்போல்தான். அசடு வழிய சிரிப்பது, டூயட் சாங்கில் அழகாய் ஆடுவது என ரெகுலர் டெம்ப்ளேட்தான் ரகுல் பிரீத் சிங்குக்கு!

sj

படத்தின் சூப்பர் ஹீரோ மகேஷ்பாபு என்றால் அடுத்த ஹீரோ எஸ்ஜே. சூர்யா! குரூரமாய் உயிர்களைப் பறிப்பதில் கொள்கிற ஆனந்தத்தை சிரித்தபடியே முகத்தில் காட்டுவது ஒன்று போதும்! இறைவிக்கு பிறகு எஸ்ஜே. சூர்யாவுக்கு இது பெயர் சொல்லும்படியான படம்.

கொஞ்ச நேரமே வந்துபோகும் கேரக்டர்தான் பரத்துக்கு. கிடைத்த கேப்பில் அப்ளாஸ் வாங்கிக் குவிக்கிறார்!!

ஆர்.ஜே. பாலாஜி அச்சுப்பிச்சு காமெடி எதுவும் செய்யாமல் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார். அவருக்கும் நமக்கும் புது அனுபவம்!!

கொலையாளி யார் என்பதையும், கொலையாளியின் அடுத்தடுத்த இலக்கு என்ன என்பதையும் கண்டறியும் வரை நிதானத்தில் பயணிக்கும் திரைக்கதை பின்னர் ராட்சச வேகமெடுக்கிறது.

*ரோலர் கோஸ்டரில் மகேஷ்பாபுவுடன் பரத் மோதுகிற,

*பெரும் பாறையொன்று மக்கள் நடமாட்டமுள்ள பரபரப்பான சாலையில் உருண்டு வந்து அத்தனை கார்களை, மக்களை நசுக்கித் தீர்த்து ஓய்கிற,

*சைக்கோ கொலைகாரன் ஹாஸ்பிடல் ஒன்றுக்கு பாம் வைத்து தகர்க்கிற அந்த கிளைமாக்ஸ் காட்சிகளில் இருக்கிற பிரமாண்டம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன!

spyder

பரபரப்பான காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் வெறித்தனமான விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். பாடல்கள் ஓகே சொல்லும்படி மட்டுமே இருக்கின்றன. அந்த சின்ன தொய்வை ஈடுகட்டும்விதமாக பாடல் காட்சிகள் அநியாயத்துக்கு கலர்ஃபுல்!!

சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னுக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கும் கலை இயக்குநருக்கும் தனித்தனி பாராட்டுகள்!

படத்தின் முடிவில் மகேஷ்பாபு பேசும் வசனங்களில் இந்த சமூகத்துக்கு அநேக சேதியிருக்கிறது!

சைக்கோ கொலைகாரன் அவனைத் தேடிப்பிடித்து அழித்தல் என்கிற வழக்கமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதில் இதுவரை இல்லாத வித்தியாசம் காட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது விருந்து படைத்திருக்கிறது ஸ்பைடர் டீம்!

Leave a Response