வெளில கிளம்புறீங்களா? அப்ப ஒரிஜினல் டிரைவிங் லைசென்சோட போங்க!

helmet-wearing-1
இனி வாகன ஓட்டிகள் தங்களுடைய ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை வைத்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டும். ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 130-ன்படி பொது இடத்தில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை கோரும் போது அந்த காவல் அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களது ஓட்டுனர் உரிமத்தை உட்படுத்த வேண்டும்.

ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

மேலும் சாலைப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற குழு, சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று முதல் வாகனங்களை ஓட்டும் போது அனைத்து ஓட்டுனர்களும் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் வாகன சோதனை நடத்தி, ஓட்டுனர்கள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார்களா? என்று ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Response