அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர… முதல்வர் திடீர் உத்தரவு!

edapadi-palanasami
அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தன்னை தலைமை செயலகத்தில் நாளை வந்து சந்திக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் அதிகார போட்டி முற்றிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் தீவிரமடைய தொடங்கிவிட்டனர். கடந்த வாரம் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாமல் தினகரனுக்கு மேலும் சில எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி அணியில் தங்களுக்கு ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும் தினகரன் குரூப் பீதியை கிளப்பி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் தம்மை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இப்படியே ஒவ்வொருவராக தினகரன் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால், அரசு பெரும்பான்மை இழந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார் முதல்வர். மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் உற்று நோக்கி வரும் அவர் இதற்கு மேலும் தமது அணியில் இருந்து தினகரன் அணிக்கு செல்வதை தடுக்கவே எம்.எல்.ஏக்களை நாளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாத நிலையில் முதல்வரின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Response