ஹீரோ நடித்ததைவிட குடித்ததே அதிகம்! ‘தப்பாட்டம்’ சினிமா விமர்சனம்

thapaa
தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு கிராமத்துப் படம்!

சாவு வீடுகளில் தப்படிப்பதுதான் ஹீரோவின் பிழைப்பு. அவனுக்கும் அவனது அக்காள் மகளுக்கும் காதல். காதல் நல்லபடியாய் கல்யாணத்தில் முடிகிறது!

இவர்கள் வசிக்கும் கிராமத்தில், பஞ்சாயத்தில் அபராதம் கட்டிவிட்டு மனதுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் வேட்டையாடுகிற ஒரு மைனர் குஞ்சு!

தான் கல்யாணம் கட்டிய பெண்ணும் அந்த மைனரது இளமை வேட்டைக்கு முன்பே பலியானவள்தான் என்பதும் அதனால்தான் கருத்தரித்திருக்கிறாள் என்பதும் தெரிய வருகிறது கதாநாயகனுக்கு. மறுக்கிறாள் அவள், வெறுக்கிறான் இவன்!

இந்த ரணகளத்தின் முடிவு என்ன என்பதே தப்பாட்டத்தின் கதை!

கதைநாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர். சாவு வீடுகளில் தப்படிக்கும் நேரம் போக சாராயம் குடிப்பது, சின்னச் சின்ன கேப்பில் அக்காள் மகளை லவ்வுவது, மனைவியை சந்தேகப்பட்டு வெறுப்பது என நடிப்பில் வெரைட்டி காட்டக்கூடிய கதைக்களம். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே முகபாவத்துடன் வந்து சலிப்பூட்டுகிறார்! படத்தில் இவர் நடித்ததைவிட குடித்ததே அதிகம். ஆம், படத்தில் சீனுக்கு சீன் சாராயம் ஆறாக ஓடுகிறது!!

ஹீரோயின் டோனா மப்பும் மந்தாரமுமாக இருக்கிறார். டூயட்டில் கவர்ச்சியாய் ஆடுகிறார். குழந்தைத் தனத்துடன் முறைமாமனை காதலித்துத் திரிவது, கணவன் நடத்தையில் சந்தேகப்பட்டதும் வேதனைப்படுவது என கொஞ்சமே கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்! அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் தேர்வார் என நம்பலாம்!

வசனங்களை ஏதோ பழங்கால மியூஸியத்தில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ‘சொந்த புத்தி இல்லாட்டியும் சுய புத்தியாவது இருக்க வேண்டாமா?’ என ஒரு வசனம் வருகிறது. இதற்கான அர்த்தத்தை எங்கே போய் தேடுவதென தெரியவில்லை!

மைனர் பேர்வழி, சாராயக் கடை, மரத்தடி பஞ்சாயத்து என காலங்காலமாய் கிராமத்துக் கதைகளில் பார்த்த சங்கதிகளே படம் முழுக்க நீள்வது, கதையில் புதுமையில்லாதது, காமெடி என்ற பெயரில் வருகிற காட்சிகள், எல்லாமுமாக சேர்ந்து பொறுமையைச் சோதிக்கின்றன.

பாவா லெட்சுமணன் கேப்பில் ஸ்கோர் வாங்குகிறார்.

நாகரிகம் அவ்வளவாக ஊடுருவாத கிராமத்தைக் காட்டியிருக்கிறார்கள்; ஒளிப்பதிவின் பங்களிப்பு நேர்த்தி!

‘பொண்டாட்டியை சந்தேகப்பட்டால் குடும்பம் சீரழியும்’ என கருத்து சொல்ல முயற்சித்த இயக்குநர் திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் தப்பாட்டம் சரியான ஆட்டமாக இருந்திருக்கும்!

Leave a Response