திமுகவுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்த ஆளுநர்; துரைமுருகன் தலைமையில் நாளை சந்திப்பு!

durai
தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில் இன்று சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க திமுக நேரம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு சந்திகலாம் என்று திமுகவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் ஆளுநர்.

அதிமுகவின் அணிகள் இணைப்புக்கு பிறகு, சசிகலாவை நீக்க பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்று இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில் தங்கள் கடிதத்தின் மீது ஆளுநர் ஒரு நடவடிக்கை எடுக்கும் வரையில் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதனிடையே, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரை தனித்தனியாக சந்தித்து மனு அளித்தனர்.

அதில், முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த 19 எம்.எல்.ஏ-க்களின் கடிதத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இரு கட்சிகளும் குறிப்பிட்டிருந்தனர். தமிழகத்தின் அதிமுக ஆட்சி என்னாவாகும் அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். ஆளுநர் சென்னை வந்தால்தான் இதற்கு ஒரு முடிவு தெரியும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். அவரை சந்திக்க திமுக நேரம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார் ஆளுநர். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட திமுகவினர் கோருவர் என தெரிகிறது. துரைமுருகன் தலைமையில் கனிமொழி எம்பி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்கின்றனர்.

Leave a Response