தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை !

rajend
முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்த 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த பேட்டி:-

14.2.2017 ல் அதிமுகவை சேர்ந்த அனைத்து சட்டசபை எம்எல்ஏக்களும் ஒரு மித்த முடிவிற்கு எதிராக எந்தவித தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படாத நிலையில், 19 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதாக மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. அவர்கள் மீடியாக்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்கள். இந்த செயல், தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டு கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவதால், இந்திய அரசியலமைப்பு சட்டம், பத்தாவது அட்டவணையின்படி, 19 எம்எல்ஏக்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். இதனை சுட்டிக்காட்டி, 1986ம் ஆண்டு தமிழக சட்டசபை விதி பிரிவு 6ன் கீழ் மாண்புமிகு சபாநாயகரிடம் அந்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

மேலும் அந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்களாகவே சென்று மனு அளித்தனர். ஆகவே நான் எனது கோரிக்கையை அளித்துவிட்டேன். இறுதி முடிவை சபாநாயகர் தான் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response