முத்தலாக் 6 மாதங்களுக்கு தடை!

talaq

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் நரிமன், லலித் மற்றும் குரியன் ஆகியோர் முத்தலாக் முறைக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர். முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறினர்.

நீதிபதிகள் நசீர் மற்றும் தலைமை நீதிபதி கெஹர் ஆகியோர் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கெஹர் கூறுகையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, 15, 21 மற்றும் 25 ஆகியவற்றை முத்தலாக் மீறவில்லை என்று கூறினார்.

இஸ்லாமியருக்கு பிரச்னை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், ”மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஏன் சுதந்திர இந்திய நாட்டில் கொண்டு வர முடியாது என்று கேள்வி எழுப்பினர்.

Leave a Response