அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

arsu1

சென்னையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்னர் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்திற்கு சி.பி.எஸ். என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் இப்போது 5 லட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18 ஆயிரத்து 300 கோடி. இந்த பணம் அனைத்தும் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இந்த பணம் எங்கே சென்றது? என்றே தெரியவில்லை. இந்த திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இந்த ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஓய்வூதியம் கிடைக்காமல் பலர் தவிக்கிறார்கள்.

இந்தநிலையில் பாராளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாக கூறியபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள். மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார். ஆனால் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை. எனவே தான் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள்.

போராட்டத்திற்கு பிறகும் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த மாதம் செப்டம்பர் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response