நாடோடி குழந்தைகளுக்கு ஓடோடிச் சென்று பாடம் எடுக்கும் மதுரை ஆசிரியர்கள் !

teachar
தூங்கா நகரமான மதுரையில் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் தஞ்சமடைந்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, ரிங்ரோடு மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வயிற்று பிழைப்புக்காக பொம்மை, வீட்டு அழகு சாதன பொருட்களை செய்து விற்று வருகின்றனர். தொழிலுக்கு ஒத்தாசையாக இவர்களது குழந்தைகளும் இருந்து வருகின்றனர். பொதுவாக தமிழகத்தில் பிறந்தவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்னாலே ‘அது வேண்டும், இது வேண்டும்’ என அலைய விடுவார்கள். அப்படி இருக்கும் போது, மாநிலம் விட்டு பிழைக்க வந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்குமா என்றால், ‘குதிரைக்கு கொம்பு முளைத்த கதை’ தான்.

இந்த குறை தற்போது தீர்ந்துள்ளது. தற்போது பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தில், நாடோடிகளாக திரியும் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதன்படி மதுரை வட்டார வளமையம் இவர்களுக்கு கல்வி கற்பிக்க உத்தரவிட்டது. இதன் அடுத்த முயற்சியாக, மதுரை உத்தங்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ராஜாத்தி, உதவி தலைமையாசிரியை சுதா ஆகியோர் இவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியை ஜெயலட்சுமியை நியமித்தனர். இவர் தினமும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பாடம் கற்பித்து வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியை ஜெயலட்சுமி கூறுகையில்:-

மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ரிங்ரோட்டில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த 25 சிறுவர்களுக்கு தமிழ், கணக்கு, ஓவியம், ஹிந்தி பாடங்களை தினமும் கற்றுக்கொடுக்கிறேன். காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை சிறுவர்கள் கல்வி கற்கின்றனர். மற்ற நேரத்தில் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் அதிகம் விரும்புகின்றனர். இதனால் கூடுதல் அக்கறையோடு தமிழ் கற்று தருகிறோம், என்கிறார்.

Leave a Response