கமலின் டுவிட் பதிவால் அமைச்சர்கள் காட்டம்!

kamal1

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் ரீதியிலான பரபரப்பு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஊழல்கள் நடப்பதால் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். எனது இந்த குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது? புதிய சுதந்திரப் போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள், வெல்வோம்” என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

amai

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இது தொடர்பாக கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். வேலூரில் மாநகராட்சி கமி‌ஷனர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

யாரையோ திருப்திபடுத்த அவர் இப்படி பேசுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதா? கலவரங்கள் நடக்கிறதா? இப்படி எதுவுமே இல்லாதபோது நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் கதை விடுவது போல கதை விடுகிறார்.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நடிகர் கமல்ஹாசன் விதாண்டாவாதமாக பேசி வருகிறார். அவருக்கு எங்களைப் பிடிக்கவில்லை. அந்த விரக்தியில் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் சுயவிளம்பரத்துக்காக அம்மா வழியில் நடைபெறும் இந்த அரசை விமர்சித்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. அதைப்பற்றி எதையும் கூற முடியாது என்பதால் ஊழல் என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறார்.

ஊழலை கண்காணிக்க அரசு துறைகள் உள்ளன. அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கமல்ஹாசன் போன்றவர்கள் குழப்பம் விளைவிக்காமல் இருந்தாலே நல்லது.

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் கமல்ஹாசன் செல்லாக் காசாகி விடுவார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டால் வர வேண்டியதுதானே. அரசை குறை கூறித்தான் வரவேண்டும் என்பது இல்லை. இந்த அரசின் மீது வெளிப்படையாக குற்றம் சொல்ல முடியாததால் தொடர்ந்து ஊழல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து அவர் கேள்வி கேட்க வேண்டும். சாதாரணமாக ஒரு உடல் உழைப்பு தொழிலாளி மாதம் முழுவதும் வேலை பார்த்தாலும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடிய வில்லை. ஆனால் நடிகர்கள் ஒரு படத்திற்கு ரூ.25 கோடி, ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.

அந்த பணத்திற்கு அவர்கள் சரியான வரி கட்டுகிறார்களா? கமல்ஹாசனின் மகள்களும் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இவை அனைத்திற்கும் முறையாக வரி கட்டுகிறார்களா? என்பதை விளக்க வேண்டும். என அவர் கூறினார்.

கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறியதாவது:-

இதுவரை நடிகர் கமல்ஹாசன் வாய் திறந்தது இல்லை. தற்போது தான் வாய் திறந்து பேசுகிறார். இதற்கு பின்னால் தி.மு.க.வினர் இருந்து கொண்டு தூண்டி விடுகிறார்கள். அதனால் தான் அவர் இப்படி பேசுகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்களின் கூட்டத்தில் இருந்து கொண்டு அவர் இந்த மாதிரி பேசுகிறார். கமல்ஹாசன் இது மாதிரி பேசுவது அழகல்ல. என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

இவ்வாறு அமைச்சர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Response