டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு. உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

dinakaran576-16-1502860062
1996ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை எழும்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் போது அமலாக்கத்துறையின் வாதம் மட்டுமே கேட்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஏப்ரல் 19-ஆம் தேதி வரை பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து விட்டு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையில் ஜூலை 31-ஆம் தேதி புதிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து வைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரும் 16-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரும் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் அரசு தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

Leave a Response