முரசொலி பவளவிழா…அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுமா?

murasoli
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் பவள விழா சென்னையில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ நாளிதழ், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக திகழ்கிறது. ‘முரசொலி’ தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு பவள விழாவுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.

பவள விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் ‘முரசொலி காட்சி அரங்கம்’ திறக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார்.

மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடக்கிறது. முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை ஆற்று கிறார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நன்றியுரை ஆற்றுகிறார்.

கருணாநிதியின் ’முரசொலி’ பவள விழா பயணம்…

திமுகவின் கட்சிப் பத்திரிகை என்று ‘முரசொலி’ அழைக்கப்பட்டாலும், 75 ஆண்டுகால வரலாற்றை பிரதிபலிக்கும் பெட்டகமாக திகழ்கிறது.

1942 – ’முரசொலி வெளியிட்டு கழகம்’ என்ற பெயரில் கருணாநிதி பதிப்பகத்தை தொடங்கினார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி, முரசொலி மாத இதழை ஏற்படுத்தினார். ஆனால் துண்டறிக்கை போன்றே வெளியிடப்பட்டது. அப்போது கிராப்ட் தாளில் அச்சிடப்பட்டது.

1944 – திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பெரியார், முரசொலி நாளேட்டையும், கருணாநிதியையும் பாராட்டினார்.

1946 – உலகப் போர் நடைபெற்று வந்த காலக்கட்டம் என்பதால், வெற்றிக்கு அறிகுறியாக முரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டிருந்தது.

1948 – நாடகத்தின் மீதான பேரார்வத்தினால் முரசொலி மீது கவனம் செலுத்தாமல் சிறிது காலம் கருணாநிதி இருந்தார். மீண்டும் ஜனவரி 14ஆம் தேதி முரசொலி வெளிவரத் தொடங்கியது. மாத இதழ், வார இதழாக மாற்றப்பட்டு 8 பக்கங்கள் – ஓரணா விலை நிர்ணயிக்கப்பட்டது. இதே ஆண்டு அண்ணாவை தாக்கி பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.ஆர்.ராதாவை கண்டித்து, முரசொலியில் கருணாநிதி கட்டுரை எழுதினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஊழல் விவகாரங்கள் குறித்து, சிலந்தி என்ற பெயரில் கட்டுரைகள் எழுதி வந்தார்.

1960 – வார இதழ் நாளிதழாக மாறியது.

1972 – எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகிய பின், அவருக்கு எதிராக கடுமையாக எழுதினார்.

1984 – எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, ’நலம் பெற்று வாருங்கள் முதல்வரே!’ என 40 ஆண்டுகால நட்பை உருகி எழுதினார்.

2003 – அண்ணா 60களில் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். அப்போது அதற்கான நியாயமான காரணங்களை பொதுக்குழு ஒன்றில் எழுதிப் பேசினார். 200 பக்கங்கள் கொண்ட அந்தப் பேச்சை 40 ஆண்டுகளுக்கு பின், முரசொலியில் வெளியிட்டார்.

இன்றைய செய்தி, நாளைய வரலாறு என்ற அடைமொழியோடு இன்றும் அரசியல் களத்தை முரசொலி அலசி ஆராய்ந்து வருகிறது. அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்தும், தனது எழுத்துக்களை பதிவு செய்கிறது. கட்சி சார்ந்த பத்திரிகை என்றாலும், வரலாற்று பெட்டகமாக இன்றும் மக்கள் மனதில் நீடித்து வருகிறது.

Leave a Response