ஏரியை பார்வையிட ஸ்டாலின் போகலாம்! -ஹைகோர்ட் அனுமதி

stalin 3
கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செல்லலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் அதிமுகவினர் கரைகளை உடைத்து சேதப்படுத்தி சட்டவிரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து திமுகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட சேலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார சென்ற மு.க.ஸ்டாலினை தடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு கட்சராயன் ஏரி விவகாரத்தில் ஸ்டாலினுடன் எந்த கவுரவ பிரச்சனையும் இல்லை எனவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் எனவும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் 25 பேருடன் செல்லலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Leave a Response