உஷார்! உங்கள் பிள்ளைகளை தற்கொலைக்குத் தூண்டும் ‘Blue Whale’ கேம்!

bl
தற்கொலைக்கு தூண்டும், ‘புளூ வேல்’ என்ற கொலைக்கார, ‘ஆன்லைன் கேம்’ ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டை, இணையத்தில் டவுண்லோடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அதில் கொடுக்கப்படும் கடினமான பணியை முடித்து விட்டு போட்டோ ஆதாரம் கொடுக்க வேண்டும். இப்படி, 50 பணிகளை முடித்த பிறகு இறுதியாக தற்கொலை செய்து கொள்ள தூண்டும் பணி கொடுக்கப்படும். இந்த கேமை விளையாடிய 14 வயது மும்பை சிறுவன், சமீபத்தில் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதனால் மகாராஷ்டிர அரசு மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது. உலகளவில், 500க்கும் மேற்பட்டோர் இந்த கேம் ஆல் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த கேம், கேரளாவிலும் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. கேரளாவில் இதுவரை, 2,000 முறை இந்த கேம் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆன்லைன் விளம்பர ஏஜென்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள போலீசார் பெற்றோர்களை உஷார்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் பாலக்காடு பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள், சாவக்காடு கடற்கரை பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளனர். அவர்கள் இந்த கொலைக்கார கேமை ஆடுவதில் மிகவும் தீவிரமாக இருந்தனர் என்பது சக பயணிகள் மூலம் தெரிய வந்தது. அந்த சிறுவர்களின் பெற்றோர், மொபைல் போன்களை சோதனை செய்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

கேரள போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கைகள் :-

* உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களை, மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

* சிறுவர்களிடம் சொந்தமாக மொபைல் போன் இருந்தால், அவர்களை தொடர்ந்து கண்காணியுங்கள்.

* குழந்தைகளுக்கு தூக்கமின்மை பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியுங்கள்.

* அதிகாலை நேரத்தில் இசை கேட்பது, நள்ளிரவில், ‘டிவி’ பார்ப்பது போன்ற விஷயங்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் பார்த்து கொள்ளுங்கள்.

* மொபைல் போனிலேயே அவர்களில் முழு கவனமும் இருக்க கூடாது. வீட்டுக்கு வெளியே சென்று மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட வையுங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.

Leave a Response