ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ என்ற பெயரில் 4 ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்தது. முதலில் இலவசமாகவும், பிறகு மலிவு கட்டணத்திலும் சேவையளித்து வருகிறது ஜியோ. ஆனால் இந்தியாவில் உள்ள மொத்த போன் பயன்பாட்டாளர்கள் 78 கோடி பேரில், 50 கோடி பேர் இணையவசதியில்லாத சாதாரண போன்களை பயன்படுத்துகிறார்கள். எனவே ஜியோ சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12 கோடியாக மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் இது பெரும் சாதனை என்றபோதிலும், ரிலையலன்சின் எதிர்பார்ப்பு மிக அதிகம்.
இந்த புள்ளி விவரத்தை கருத்தில் கொண்டு முகேஷ் அம்பானி சில தினங்கள் முன்பு தங்கள் நிறுவனத்தின் 4ஜி போன்களை அறிமுகம் செய்தார். இந்த போனின் விலை ரூ.1500. ஆனால் 3 வருடம் கழித்து போனை திரும்பி கொடுத்தால் இந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே போன் இலவசம் என்பதுதான் கணக்கு.
கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் அல்லது, பாட்டி, தாத்தாக்களுடன் நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வீடியோ கால் செய்து பேச நினைக்கும் வாரிசுகள் இனிமேல் இந்த போனை பரிசாக அளித்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இளைஞர்களும்கூட கூடுதலாக ஒரு போன் என்ற அடிப்படையில் இதை வாங்கிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறது ரிலையன்ஸ்.
இந்த இலவச போன் விற்பனைக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. இருப்பினும் இந்த போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதுகுறித்து துறைசார் நிபுணர் ஒருவர் கூறுகையில், ரிலையன்ஸ் அறிமுகம் செய்ய உள்ள போனில், வாட்ஸ்அப் வசதி கிடையாது. பேஸ்புக், யூடியூப் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய முடியும் என்று தெரிவித்தார். எனவே வீடியோ கால் செய்ய வேறு ஆப்களை டவுன்லோடு செய்துகொள்வது உசிதம்.